இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் 17.50 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், நவம்பர் 2021 மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் மாதத்தில் 602 புகார்கள் வந்துள்ளது. அதில் 36 புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-ன் படி, 6-வது மாதமாக நவம்பர் மாத அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். பயனாளிகளின் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய இந்த அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள், தீர்வுகள், தடை செய்யப்பட்ட கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

செயற்கை நுண்ணறிவில் அதிகமான முதலீடு செய்து தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறோம். புள்ளிவிவர ஆய்வாளர்கள், வல்லுநர்களை பணியமர்த்தியிருக்கிறோம். இவை அனைத்தும் பயனாளிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் 17,59,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. எங்களுடைய சேவையில் இன்னும் அதிகமாக வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவோம்” என வாட்ஸ்அப் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.