ஆந்திராவின் ஏலூரு நகரின் பல இடங்களில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற நகரில் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் மர்ம நோய் காரணமாக பாதிக்கப்பட்டு, ஏலூரு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், எஞ்சியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மருத்து நிபுணர் குழுவினர் ஏலூருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

[su_image_carousel source=”media: 19779,19780″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆந்திர சுகாதாரத்துறை மந்திரி அல நானி, உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நிலையை கண்காணித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏலூரு பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தன்மை கண்டறியப்படாத இந்த நோயின் தாக்கம் குறித்து தொடர்ந்து சுகாதார அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழுவும், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, ஏழு பேரைக் கொண்ட மருத்துவக் குழுவும் ஏலூரு பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்