அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என அறிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபான்கள் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடந்த மீட்புத் திட்டத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள், வெளிநாட்டவர்கள், ஆப்கான் மக்கள் என ஏராளமானோர் வெளியேறினர். கொடூரமான தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கனிஸ்தான் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே இடம் பெயர்வைத் தொடங்கினர்.

இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே ஆகஸ்ட் 30 அன்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து வெளியேறியது.

தற்போது ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார்.

[su_image_carousel source=”media: 26081,26080″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில், “அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு சென்று விட்டனர்.‌ ஆப்கான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டது” எனக் கூறினார்.

காபூல் விமான நிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் என்பவர் இது பற்றி கூறுகையில், “காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறிவிட்டன. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்துவிட்டது” என்றார்.

இதுகுறித்து அமெரிக்க மத்தியப்படையின் காமாண்டர் ஜெனரல் ஃபிராங் மெக்கென்ஸி கூறுகையில், “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. இதன் மூலம் 20 ஆண்டுகாலப் போரும் முடிந்தது. அமெரிக்க மக்கள், ஆப்கான் மக்கள், பிறநாட்டவர் என அனைவரையும் வெளியேற்றும் திட்டமும் நிறைவடைந்தது.

இது சாதாரணப் போர் அல்ல, இந்த போரில் 2,461 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா- தலிபான்கள் மோதல்:

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது.

அப்போது அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர் ஆண்டுக்குக் கணக்கில் நீண்டது. தாலிபன்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர். இருதரப்பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக வந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாங்கள் வேட்டையாடுவோம்: ஜோ பைடன் கடும் எச்சரிக்கை