பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிச்சுற்று போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

அமெரிக்க வீரர் சாம் கிரேவ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சமமான உயரம் தாண்டியதால் மேலும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இதில் அமெரிக்க வீரர் 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2வது இடம் பிடித்தார்.

[su_image_carousel source=”media: 26056,26057″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

முன்னதாக இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே மாரியப்பன் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அத்துடன் 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்: இதுவரை 8 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்