அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார்.

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்ற பிறகும், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார் டிரம்ப். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஜோ பைடன் வருகிற 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்தில் தேர்வுக் குழு வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணிகளை தடுப்பதற்காக, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார். டிரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்தது.

இதனையடுத்து துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பிடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதன்படி வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் முடிவுகளில் எனக்கு முற்றிலும் உடன்படவில்லை. இருந்தாலும் ஜனவரி 20 ஆம் தேதி அன்று நானாகவே முன்வந்து அதிபர் பதவியில் இருந்து வெளியேறுவேன்.

அன்றைய தினம் ஒழுங்கான முறையில் ஜோ பைடனிடம் அதிகாரம் மாற்றப்படும். இது ஜனாதிபதி வரலாற்றில் எனது முதல் பதவி காலத்தின் முடிவைக் குறிக்கும் அதே வேளையில், அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்குவதற்கான எங்கள் முதற்கட்ட போராட்டம் தான் இது” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; 4 பேர் பலி