வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 2 முறை சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் மாற்றம், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறையை கொண்டு வந்தது.

அதன்படி கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு உயர்த்தி வருவது பொது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.610-லிருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் இருமுறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.900.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.190 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான இந்தத் தொடர் விலை உயர்வால் கடந்த ஆண்டு மே மாதத்தோடு மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 2014 ஆம் ஆண்டு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.410.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.884 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சமையல் சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்ந்தற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.. எஸ்வி.சேகர் மீது நீதிமன்றம் கடும் தாக்கு