விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை கனடா நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றோடு 9வது நாளை எட்டி உள்ளது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார்.
உரிமைகளை பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து கனடா தூதர் நதிர் படேலை நேரில் அழைத்து இந்தியா கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதை ஏற்கமுடியாது என்றும், இதுபோன்ற கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.