டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த 6 நாட்களாக டெல்லியின் உள்ளேயும் எல்லையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலக கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீக்கிய குரு குருநானக்கின் 551-வது பிறந்தநாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசியபோது, “இந்தியாவில் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவு கரம் கொடுக்கும் கனடா பிரதமர்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவா, ‘இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டின் தலைவர்கள் கருத்துகள் பகிர்வதைப் பார்க்க முடிந்தது. இத்தகைய கருத்துகள் தேவையற்றவை. குறிப்பாக ஜனநாயக நாடான இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அவர் தேவையில்லாமல் வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது’ என்று குறிப்பிட்டார்.

கனடா பிரதமரின் கருத்து குறித்து தெரிவித்த சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ‘உங்களுடைய அக்கறை உள்ளத்தை தொடுகிறது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மற்ற நாட்டு அரசியலுக்கு இது உணவு அல்ல. நாங்கள் மற்ற நாடுகளுக்கு அளிக்கும் மதிப்புகளை நீங்களும் அளியுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.