சத்தீஸ்கர் மாநிலத்தில் விபத்தில் தாய் தந்தையை இழந்த 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை வழங்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களின் பணிக்காலத்தில் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய நிகழ்வு சுவாரஸ்யத்துடன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமார், அங்குள்ள பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றிவந்தார்.

இவர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி, தன் மனைவி மஞ்சு மற்றும் குழந்தை ராதிகா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். ஆனால் குழந்தை ராதிகா இந்த விபத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இன்றி உயிர் பிழைத்தார்.

இதனைத்தொடர்ந்து ரயில்வே விதிகளின்படி ராஜேந்திர குமாரின் குடும்பத்துக்கான அனைத்து உதவிகளும் ராய்ப்பூர் ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன. மேலும் தன் பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தை ராதிகாவுக்கு, ரயில்வே விதிகளின்படி அரசுப் பணி ஒதுக்கீடும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துபூர்வமான ஆவணப்பதிவு, ராய்ப்பூரிலுள்ள ரயில்வே கோட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் காரணமாக உயிரிழந்த ராஜேந்திர குமார் குடும்பத்தில் உயிரோடு இருக்கும் 10 மாத குழந்தை ராதிகாவுக்கு ரயில்வே வேலை வழங்க உத்தரவிடப்பட்டது.

ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவை தென்கிழக்கு மத்திய ரயில்வேயும் உறுதி செய்தது. இதன் பின்னர், அலுவல் ரீதியான நடைமுறையின் படி, குழந்தை ராதிகாவின் கைரேகையைப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய ரயில்வே வரலாற்றில் 10 மாதக் குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “கருணை அடிப்படையில் குழந்தைக்கு வேலை அளிப்பது இதுவே முதல்முறை. 10 மாதக் குழந்தை ராதிகா, 18 வயதை எட்டியதும் அவருக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் ரயில்வே வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.