தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

விஜய்யின் படப்பிடிப்பு காசிமேடு, தண்டையார் பேட்டை பகுதியில் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குவிந்து விடுகின்றனர். படக்குழுவின் செக்யூரிட்டி பிரிவால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேறு வழியின்றி போலீசார் அழைக்கப்பட்டு லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

தனது ரசிகர்கள் மீது தடியடி என்பதை கேள்விப்பட்ட விஜய், படப்பிடிப்பு இடத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பும், காட்டாங்கொளத்தூர் பகுதியில் படப்பிடிப்பை முடித்து வீடு திரும்பியபோது தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கிவிட்டு பாதுகாப்பாக பத்திரமாக வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதே போன்று பரங்கிமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, மாணவ மாணவிகள் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அங்கிருந்த தடுப்பு வேலி சரிந்து விழுந்தது. அப்போது தனது ரசிகர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று கருதி, ஓடிச் சென்று அந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.