மிகவும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி உயிரிழந்ததாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தில், எடின்பர்க்கின் குடிசைப் பகுத்களில் பிறந்தவர் ஷான் கானரி. கடும் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. தினக்கூலி முதல் ராணுவம் வரை பல்வேறு தளங்களில் பணியாற்றிய ஷான் கானரி 1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

சின்னத்திரையிலும் சில நாடகங்களில் கானரி நடித்து வந்தார். 1957ஆம் ஆண்டு, ‘நோ ரோட் பேக்’ என்கிற திரைப்படத்தில் ஷான் கானரிக்கு முதல் முழு நீள கதாபாத்திர வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில வாய்ப்புகள் வந்தாலும் 1962ஆம் ஆண்டு, ‘டாக்டர் நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தது தான் ஷான் கானரியை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்கிற பெருமையும் கானரியைச் சேரும். கானரி நடித்த 7 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இன்னும் பல்வேறு வெற்றிப் படங்களில் கானரி நடித்திருந்தாலும் இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் தான் அவரது அடையாளமாக இருந்து வருகிறது.

அவரது நடிப்பு வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது. ‘தி அண்டச்சபிள்ஸ்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கானரி வென்றார். மேலும் 2 பாஃப்தா விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார்.

40 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் கானரிக்கு, ‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், ‘தி ஹண்ட் ஃபார் தி ரெட்’ அக்டோபர், ‘தி ராக்’ உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழைத் தேடித் தந்தன.

சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த ஷான் கானரி (வயது 90), இன்று (அக்டோபர் 31) காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், சினிமா துறையினரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா விலகும் வரை ‘நோ’ அரசியல்; ரஜினி ட்வீட்டால் கதறும் பாஜக