சமூக வலைதளமான பேஸ்புக் (Facebook) நிறுவனத்தின் பெயர் மெட்டா (Meta) என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
உலகில் அதிக பயனர்களை கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் சமீப காலமாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 04 ஆம் தேதி பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் முடங்கியது. இதனால் 52000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தார் மார்க் சக்கர்பெர்க்.
இதனையடுத்து சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும் அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பேஸ்புக் ஆண்டு கூட்டத்தின்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, மெட்டா பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படும். அதாவது சுருக்கமாக மெட்டா என்று அழைக்கப்படும்.
மெட்டாவெர்ஸ் என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய்நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் ஆப், உள்ளிட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம். அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் 100 கோடி மக்களைச் சென்றடையும்.
மேலும் சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதே சமயம் தங்கள் ஆப்களும் அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.