சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு,”கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை இதுநாள் வரை அனுமதிக்காமல் இருந்து வந்தது என்பது சட்ட விரோதம், அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனறும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’’ என கடந்த மாதம் 28ம் தேதி உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்கு பல தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், சில தரப்பினர் மத்தியில் இத்தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து நாட்டின் ஆர்எஸ்எஸ் இந்து மதவாத இயக்கம் தூண்டுதலால் சில பகுதிகளில் போராட்டங்களும், கண்டனப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ” கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தை தாண்டிய பெண்களும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பது மரபு ரீதியாக கடைபிடித்து வரப்பட்டது. அதில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற தடை இருந்தது. எனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் மறுஆய்வு மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என தலைமை நீதிபதி முன் மனுதாரர் ஷைலஜா முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஈடுபட்டுள்ள இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் பட்டியலிட்டப்படும வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துவிட்டது.

இந்த பின்னடைவு ஹிந்து பிற்போக்குவாதிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து விட்டாலும் ., இந்தியாவில் உள்ள் பல்வேறு பெண் உரிமை அமைப்புகள் இதனை வரேவேற்று உள்ளனர்.