கொரோனா ஊரடங்கால் ஆலைகளும், ஷோரூம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுசுகி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப அனைத்து உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டுள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளது.

எனினும், துறைமுக செயல்பாடுகள் தொடங்கிவிட்டதால், 632 யூனிட் கார்கள் அடங்கிய சரக்குகள் குஜராத் மாநிலத்திலுள்ள முந்த்ரா துறைமுகம் வாயிலாக புறப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்ட பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: Write Off என்றாலே தள்ளுபடி தான் : வங்கி ஊழியர் சம்மேளன அதிகாரி விளக்கம்

கொரோனா ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் வாகன உற்பத்தி துறை முக்கியமானது. எனினும், இயல்பு நிலைக்கு திரும்ப தொழில்துறை சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே மாதம் முதல் உற்பத்தியில் 50 விழுக்காடு பணிகளை தொடங்க மாருதி சுசுகி நிறுவனமும், ஹுண்டாய் நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.

மே 4 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்துள்ளதால், மே மாதம் முதல் கார் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.