தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின், மே-4ம் தேதி முதல் எவையெல்லாம் செயல்படலாம் என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

பெரு நகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர) பின்வரும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும். தமிழகத்தில் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் சூழலுக்கேற்ப 25 சதவீத பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீதம் பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e- commerce) ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: நாட்டை 3 மண்டலங்களாக பிரித்து, மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

முன்னதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சிகப்பு, பச்சை, ஆரஞ்சு என 3 ஜோன்களாக பிரிக்கப்பட்டு, இப்பகுதிகளையே காரணப்படுத்தி ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவித்திருந்தது.

ஊரடங்கு தளர்வு குறித்து, மத்திய அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அறிவிப்புகளும் மாறிமாறி இருப்பதால், மே-4ம் தேதி முதல் எவையெல்லாம் செயல்படும் என்பது குறித்த குழப்பம் மக்களிடையே தற்போது வரை நிலவுகிறது. இந்த குழப்பத்தால் மீண்டும் சமூக பரவல் நிகழ்ந்துவிட கூடாது என்கிற அச்சமும் சமூக செயற்பாட்டாளர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் குழந்தைகள் 83 பேரும் பெண் குழந்தைகள் 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 முதல் 60-வயதுக்குட்பட்டவர்கள் வரை 1554 ஆண்களும், 763 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89 பெண்களும், 191 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.