இந்தியன் ஓவர்சீஸ், சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் முடிவிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அரசின் முக்கிய துறைகள் தனியார்மயமாகி வரும் நிலையில், தற்போது சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வாராக்கடன் பிரச்னையை காரணம் காட்டி, கடந்த ஏப்ரலில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக்கப்பட்டன.
தற்போது 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து 5 வங்கிகளாக்க பாஜக மோடி அரசு முடிவுசெய்துள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வங்கித் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, மஹாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும் வாசிக்க: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்..
பாஜக மோடி அரசின் முடிவிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து வங்கி சங்க சம்மேளனம் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் 30,000 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளில் இருந்து கொடுக்கப்பட்டது. 1000 கோடி மட்டுமே தனியார் வங்கிகளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இன்று பொதுத்துறை வங்கிகள் தான் சாதாரண மக்களுக்கு முன்னுரிமை கடன் வழங்குகிறது. அதன் மூலமாகவே அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. தனியார்துறை வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்கள் அனைத்தும் உயர்மட்ட ஊழலில் சிக்கி தவிக்கின்றன.
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் மக்களின் பணத்திற்கும் பாதுகாப்பு இருக்காது. மேலும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கான கடனும் கிட்டாது. அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் என்பது கடுமையாக பாதிக்கப்படும். எனவே மத்திய அரசாங்கம் இத்தகைய முயற்சி மேற்கொள்வதை உடனடியாக கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளது.
பாஜக அரசின் தனியார்மயக் கொள்கை, நாட்டையே பின்னுக்குத் தள்ளும் எனவும், கார்ப்பரேட்களுக்காகவே தனியார்மய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் பல அரசியல் கட்சிகளும், பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.