தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற எடப்பாடி பழனிசாமி அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். மேலும் இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த ஜெயலலிதா இல்லத்தை நினைவு சின்னமாக மாற்றப்படும் என மூன்றாண்டுகள் முன்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் அவரது போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தமிழ் வளர்ச்சியால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்காக நடவடிக்கை 05.10.2017 அன்று தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக தற்போது ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

மேலும் வாசிக்க: PMCares Fund சர்ச்சை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு

இந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்றும், இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது, என்றும் அரசு கூறியுள்ளது.

இதற்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, முதல்வர் தலைவராக இருப்பார், துணை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள், மக்கள் தொடர்பு தகவல் இயக்குனர் செயலாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை வேதா இல்லத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், அங்குள்ள பொருட்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.