ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வறிக்கையில் அருண் அகர்வால் குழு தெரிவித்திருப்பதாகவும், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படாமல் ஆலை மூடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை கண்காணிக்க வேண்டும். தற்போது ஆலைப்பகுதியில் உள்ள காப்பர் கழிவுகளை அகற்ற வேண்டும், துறைமுகத்தில் இருந்து காப்பர் துகள்களை கண்டெய்னர்களில் கொண்டு வர வேண்டும், 10 நாட்களுக்கு ஒரு முறை காப்பர் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணையின் போது வழக்கை அடிக்கடி ஒத்திவைக்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
 
மேலும், ஆய்வறிக்கைக் குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
 
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
 
பசுமைத் தீர்பபாயம் பிறப்பித்த உத்தரவில், ‘ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், சூழல் மாசுபாடு விதிகளை ஆலை கடுமையாக மீறியிருப்பது குறித்தும் போதுமான ஆதாரங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியமும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற மனுதாரர்களும் அளிக்கவில்லை.
 
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னைக்குத் தீர்வுகாண நம்பகமான வழிமுறைகளை காணும் வகையிலும், அனைத்துத் தரப்பினரின் நியாயங்களை ஆராயும் வகையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழுவிடம் வழக்கை ஒப்படைக்கிறோம். இக்குழு இந்த விவகாரத்தை தொடக்கத்திலிருந்து விசாரிக்கும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆய்வறிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பளார்களே எடப்பாடி தலைமையில் இயங்கும் அதிமுக தமிழக அரசு ஆலை நிர்வாகத்துக்கு வேண்டுமென்றே எடுத்த மிதமான போக்கே இந்த நிலைக்கு காரணம் என்றும் கூறுகின்றனர் .
 
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் “தனியாருக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக துவக்கத்திலிருந்தே அதிமுக அரசு ஒருதலைப் பட்சமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு அடுக்கடுக்கான உதாரணங்களை எடுத்துக்காட்டிட முடியும்.
 
ஜனநாயக ரீதியில் அறவழியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது, நூறாவது நாளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பலிவாங்கியது; உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும், பலியானோர் குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் வேண்டுமென்றே கால தாமதம் செய்தது;
 
தமிழக அரசின் பிரதிநிதிகளே இல்லாமல் ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க அனுமதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழகத்தின் வாதங்களை கோட்டை விட்டது என வரிசையாக எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.
 
மேலும் இந்த  வழக்கினை ஆரம்ப கட்டத்தில் விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு “ஆலையை மூடி அரசு போட்டுள்ள உத்தரவு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. ஆகவே கொள்கை முடிவு எடுத்து முறையான ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று அரசுக்கு முன்னெச்சரிக்கை செய்தும்,அதிமுக அரசு திருத்திக் கொள்ளாமல் ஏதோ உள்நோக்கத்தோடு அடம்பிடித்தது. அதனால் மனித நேயமற்ற, மனித உரிமைகளுக்கு எதிரான போலீஸ் தடியடி மற்றும் கொடூரமான துப்பாக்கிச்சூட்டின் காயங்கள் ஆறுவதற்கு முன்பே,தனியார் ஆலை திறக்கப்பட்டு விடுமோ என்ற நிலை இப்போது உருவாகி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்பகுதி மக்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள் என கூறி உள்ளார்