பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசின் இரண்டு துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தீவிரமாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்
 
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் ரசாயனத்துறை அமைச்சகங்கள் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு அமைச்சகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், பிப்ரவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.