அசாம் மாநிலத்தில் அதிகவேகமாக பரவி வரும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 2,500 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில், 306 கிராமங்களில் சுமார் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து கொத்து கொத்தாக உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய் தொடர்பான ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது. மேலும் போபாலில் இருக்கும் விலங்குகள் நோய் உயர் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம், இந்த வைரஸ் ‘ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃபுளூ’ என்று உறுதிபடுத்தியுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில விலங்குகள் பராமரிப்பு, கால்நடைத்துறை அமைச்சர் அதுல் போரா கூறுகையில், ”நாட்டிலேயே இந்த வைரஸ் முதன் முறையாக அசாம் மாநிலத்தில் பரவி உள்ளது. பன்றி இறைச்சி, அதன் உமிழ்நீர், ரத்தம், திசுக்கள் வாயிலாக இந்த நோய் பரவும். ஆதலால் மாநிலங்களுக்கு இடையே இந்த பன்றிகள் பறிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக் கூடியது இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃபுளூ வைரஸ்.

மேலும் வாசிக்க: வெட்டுக்கிளி கூட்டம் மீண்டும் புது வரவா.. அதிர்ச்சியில் வட இந்திய விவசாயிகள்

இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய சீனாவின், ஜைஜாங்க் மாகாணத்தில் இந்த நோய் 2019 ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டது. அருணாசலப்பிரதேசம் வழியாக அசாமில் இந்த நோய் பரவி இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. எனினும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 21 லட்சம் பன்றிகள் இருந்தன. ஆனால், சமீபத்தில் இது 30 லட்சம் வரை அதிகரித்துவிட்டது. தற்போது மாநிலத்தில் மூன்று பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வுக்காக சுகாதாரத்துறையையும் அணுகி உள்ளோம்.

தற்போது பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆரோக்கியமாக இருக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.