தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே ஆண்டில் இரண்டு முறை உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர்- எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 24 கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதிதாக கட்டப்பட்ட இந்த தடுப்பணையை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார்.

400 மீட்டர் நீளம், 3.1 மீட்டர் உயரம் கொண்ட இந்த தடுப்பணையின் ஒரு மதகு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி திடீரென உடைந்து, அருகே இருந்த பாசன வாய்க்கால்களில் தண்ணீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புதிதாக கட்டிய தடுப்பணை சில மாதங்களிலேயே உடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், மண் அரிப்பு காரணமாக இந்த விபத்து ஏப்பட்டதாக கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதலாக 7 கோடி ரூபாய் செலவில் தடுப்பணையை சரி செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் தடுப்பணையின் மற்றொரு பகுதியான தளவானூர் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதகுகள் உடைந்து தற்போது தண்ணீர் முழுவதுமாக வெளியேறி வருகிறது. தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தகலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் தடுப்பணை உடைந்த பகுதியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து தண்ணீர் வெளியேறாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தளவனூர் தடுப்பணை கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஜனவரி மாதம் அணையின் மறுபுறம் உடைந்தது. தற்போது மீண்டும் உடைந்துள்ளது.

ஓராண்டில் மட்டும் இரண்டு முறை தடுப்பணை உடைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு இந்த தடுப்பணையே சான்று. மேலும் தடுப்பணையை முழுமையாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே ஆண்டில் இரண்டு முறை உடைந்துள்ள சம்பவம் பொதுப்பணித்துறையின் கட்டுமான தரத்தை கேள்வி எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, பல ஏக்கர் விவசாய நிலங்களில் பாய வேண்டிய நீர் வீணாக வங்கக் கடலில் கலப்பதாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கே.பி.பார்க் குடியிருப்புகளைத் தரமற்ற முறையில் கட்டிய பி.எஸ்.டி நிறுவனம் தான் இந்த தடுப்பணையையும் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்குமாடிக் குடியிருப்புகளை அடுத்து தடுப்பணைகளையும் தரமற்ற முறையில் கட்டியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.