நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாய அளவை தாண்டி உள்ளது.

டெல்லியில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலே காற்று மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக சாலைகள் புகை மண்டலமாக காட்சி அளித்தன. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. டெல்லியில் கோயில் சாலை பகுதியில் காற்று மாசுபாட்டின் அளவு 707 ஆகவும், மேஜர் தயான் சந்த் மைதானம் பகுதியில் 676 ஆகவும், ஜவஹர்லால் நேரு மைதானம் பகுதியில் 681 ஆகவும் உள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு நவம்பர் 1 முதல் 10 வரை ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி போன்ற பொருட்கள் எரிப்பதற்கும், வீட்டு புகை உள்ளிட்டவைகள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் வாகனங்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அரசு துறைகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது.