உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி தந்தையை இழந்த 4 குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். 

திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமான சோனு சூட், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த பேருதவிகள் அவரை ஹீராவாக்கியது. கொரோனா பாதிப்பால் மும்பை உள்ளிட்ட இடங்களில் வேலையில்லாமல் பணமில்லாமல் சிக்கியிருந்த கூலித் தொழிலாளர்களை மீட்டு தனது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அத்தோடு பசியால் வாடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களையும் அவர் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் மாடு வாங்க காசு இல்லாமல் இரு மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். இதுபோல் தொடர்ந்து பலருக்கும் உதவிக் கரம் நீட்டி வருகிறார் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறை உருகி கடந்த 7 ஆம் தேதி பனிச்சரிவும், கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

இதில் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் சரிந்து வெள்ளப்பெருக்கு; 170 பேர் காணவில்லை

இந்நிலையில் தபோவன் ஹைட்ரோபவர் நீர் மின் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் பண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரின் வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில், இவரது திடீர் பேரிழப்பால் மனைவி, 4 குழந்தைகள் நிலைகுலைந்து போயினர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று, உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 4 மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அஞ்சல், அந்த்ரா, காஜல், அனன்யா ஆகிய 4 பெண் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றதோடு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இனி இந்தக் குடும்பம் என்னுடையது” என பதிவிட்டுள்ளார்.

தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வரும் சோனு சூட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்; தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்