பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோவையை பூர்வீகமாக கொண்ட இவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து இன்று தேசியப் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். மைக்கும் மேடையும் கிடைத்துவிட்டால் வாய்க்கு வந்ததை பேசும் பாஜகவினர் மத்தியில் மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகம் செய்பவர்.

விவாதக்களமாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி அரசியல் நாகரீகம் பேணக் கூடியவர் வானதி சீனிவாசன். இதன் காரணமாகவே ஊடக விவாத நிகழ்ச்சிகளுக்கு அவர் விரும்பி அழைக்கப்படுவார். நேர்த்தியான செயல்பாடும் நிதானமான நடவடிக்கைகளும் அவருக்கு தேசியப் பதவியை தேடி வரவைத்துள்ளன.

சமீபத்தில் பாஜக கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவரின் பெயர் கூட இடம்பெறாதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறாதது தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்றார்.

இந்நிலையில், பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து, இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்பது அந்தக் கட்சியின் உச்சபட்ச பதவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்பதவியில் இதற்கு முன் சஞ்சிதா டோக்ரா என்பவர் இருந்த நிலையில் இப்போது அந்த இடத்திற்கு வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியர் யார் வேண்டுமானாலும் ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு