காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமினம் செய்து கவனித்து வந்தது அரசு.

இந்நிலையில், தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தை அதிகாரமற்ற அமைப்பாக மாற்றி, அதன் செயல்பாடுகளை முடக்கி உள்ளது.

அதுதவிர கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், தேசிய நீர் தகவல் மையம் உள்ளிட்டவைகளும் மத்திய நீர்வளத்துறை அமைச்சக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், இத்தகைய அரசாணையை வெளியிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல். காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே முதலமைச்சர் உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். மேலும் இந்த அரசிதழ் உடனடியாக திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க: இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பு- எச்சரிக்கும் அமெரிக்கா

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தவா சட்டம் 1956 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

கொரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பாஜக அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.