ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், இனி ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370 சட்டப்பிரிவை விலக்கிக் கொண்டது. அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இன்று (அக்டோபர் 27) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணை, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் ஆணை, 2020 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “இந்த சட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை, வேறு விதமான பயன்பாட்டிற்காக உபயோகிக்க முடியாது. அதேநேரத்தில், விவசாய நிலங்களில், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தத் தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

இந்த ஆணைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “காஷ்மீர் மாநிலமே விற்பனைக்கு வந்துள்ளதாகவும், சிறு நில ஏழை உரிமையாளர்கள் இதனால் துயரம் அடைவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

மோடிதான் எங்கள் ராவணன்; தீயிட்டு கொளுத்தி தசரா கொண்டாடிய விவசாயிகள்