பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அநாகரிகமாக, அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக மத்திய அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம்ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், வெறும் அறிவிப்பாக மட்டுமே கிடப்பில் போடப்பட்டது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையின் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச், மதுரை எய்ம்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் உட்பட 17 பேர் கொண்ட உறுப்பினர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மதுரை எய்ம்ஸ்க்கு நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகம் ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக உள்ளார். மருத்துவர் சுப்பையா மீது, பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எய்ம்ஸின் வாரியக் குழுவில் சுப்பையா சண்முகம் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி கூறுகையில், “இது அநாகரிகமான செயலை ஏற்கும் நடவடிக்கையா அல்லது பாஜக தொண்டர்கள் இதுபோல நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்க நடவடிக்கையா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை #AIIMS நிர்வாகக் குழுவில் தென்மாவட்ட எம்.பி.க்களுக்கு இடமில்லை; பெண்ணினத்தை அவமதித்த ABVP அமைப்பைச் சேர்ந்த நபருக்கு இடமா? இதுதான் பாஜக ‘பிராண்ட்’ கலாச்சாரமா?.. சுப்பையா சண்முகத்தை நீக்கிவிட்டு, எம்.பி.க்களைச் சேர்க்க தமிழக முதல்வர் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்.. பதிலளிக்க மறுக்கும் மோடி அரசு