தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியே முழு காரணம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் நுழைவுத் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பிறகு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக, நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீட் விலக்கு சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிய நிலையிலும், இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதனால் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருககு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த வாரமும் இந்த வாரமும் டெல்லியில் முகாமிட்டனர்.

இந்த குழுவில் மாநில எதிர்கட்சியான அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், விசிக எம்.பி திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், ஐயுஎம்எல் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்திக்க சென்றனர்.

ஆனால், முன்பே நேரம் ஒதுக்கப்படாததால் அவர்களை சந்திக்க உள்துறை அமைச்சரின் செயலாளர்கள் அனுமதிக்கவில்லை. மறுநாளும் நேரம் சந்திக்கவில்லை. முன்னதாக இந்த குழு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க சென்றபோது, கொரோனா பரவல் வழிகாட்டுதல் காரணமாக எம்.பி.க்கள் குழுவை குடியரசு தலைவர் நேரில் சந்திக்காமல் தமது செயலாளர் மூலமாக மனுவை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.

உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்காததால் கடந்த வார இறுதியில் எம்.பிக்கள் குழு சென்னைக்கு திரும்பினர். இந்நிலையில், உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திப்பதற்காக 3.1.2022 காலையில் டி.ஆர்.பாலு தலைமையில் அதே குழு டெல்லி சென்றது. ஆனால் மீண்டும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழுவை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் புதன்கிழமை காலையில் தொடங்கியது. அதில் நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களுக்கு தேவையில்லை என்ற கருத்தும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது. அதை ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்தார்.

இந்நிலையில், திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை காத்திருந்தும் சாதகமான பதில் கிடைக்காததால் மீண்டும் சென்னைக்கு திரும்ப தமிழக எம்.பிக்கள் குழு முடிவு செய்தது. அதற்கு முன்னதாக, தங்கள் தரப்பில் ஒரு மனுவை தயாரித்து அதை அமித்ஷாவின் அலுவலகத்துக்கு எம்.பி.க்கள் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தமது டெல்லி இல்லத்தில் டி.ஆர். பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “
“நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா குறித்து இந்திய உள்துறை அமைச்சரை சந்திக்க 3 முறை முயன்றும் முடியவில்லை. அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று மனு அளிக்க முடிகிறது. ஆனால், உள்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநரே அதை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதில் தாமதத்திற்கு முழு காரணம் ஆளுநர் தான். அரசியலமைப்பின் மீது பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதை குழி தோண்டி புதைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். மசோதாவை ஒன்றிய அரசுக்கு அவர் அனுப்பியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.