பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். வேல் யாத்திரைக்கான சுற்றுப் பயண விவரத்தை பாஜக துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டிருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள் உள்ளிட்டோர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகுவதுடன் கொரோனா பரவலும் அதிகரிக்கும்.

மேலும் வேல் யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதால் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதையடுத்து பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்ககாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.

இந்த வழக்கு இன்று (நவம்பர் 5) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை பரவலுக்கான வாய்ப்பு உள்ளதால், நாளை (நவம்பர் 6) தொடங்க உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம். மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

எஸ்கேப்பான ரஜினி … கழுதை படத்தை போட்டு முராரி ராகம் பாடும் துக்ளக் குருமுர்த்தி