மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண் காவலரை தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்தது மும்பை போலீஸ்.

ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தனது தற்கொலைக்கு கரணம் என எழுதி வைத்துவிட்டு, மும்பையைச் சேர்ந்த 53 வயதான இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, அன்வாய் நாயக்கின் மகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைதின் பொது தன்னை மும்பை போலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார்.

தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி, நேற்று (நவம்பர் 4) மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் அதாவது நவம்பர் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைதின்போது பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாமியின் மனைவி மற்றும் மகன் தாக்கியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு மோடி அரசின் பல அமைச்சர்கள் விரைந்து வந்து, தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

அதில், குறிப்பாக ஸ்மிருதி இரானி பதிவில், “சுதந்திரமான பத்திரிகையாளர்கள், அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக இந்த சூழலில் குரல் கொடுக்கவில்லை என்றால், அவர்கள், தந்திரோபயமாக ஃபாசிஸத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று கூறியுள்ளார்.

அவரின், இந்த வார்த்தைகள் மிரட்டல் போன்று உள்ளதாக கண்டனம் எழுந்து வருகிறது. இதற்கு முன்னர் பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டபோது, மத்திய அமைச்சர்கள் இவ்வளவு விரைவாக முன்வந்து, இந்தளவிற்கு குரல் கொடுத்ததில்லை.

சுதந்திரமான விமர்சனங்களை மோடி அரசின் மீது தெரிவிக்கும் பிரபலங்கள் பலர், மோடி அரசால் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது அனைவரும் அறிந்ததே என்பன போன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

அர்னாப் கோஸ்வாமியால் தற்கொலை செய்தவரின் மகள் போலிஸ் நடவடிக்கைக்கு வரவேற்பு