விவசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க், ரிஹான்னா உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்ததற்கு, சச்சின் டெண்டுல்கர், வீராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய போராட்டம் தற்போது உலகளவிலான பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் நட்சத்திரமும் பாடகியுமான ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தற்போது ட்விட்டரில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியதை மத்திய அரசு விரும்பவில்லை. இது எல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் என்று கூறி மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த வெளியுறவுத்துறை அறிக்கையை தொடர்ந்து வரிசையாக திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் இது தொடர்பாக ட்விட் செய்தனர். இந்திய விவகாரத்தில் வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது. இந்திய பிரச்சனை குறித்து பேசும் உரிமை வெளிநாட்டு மக்களுக்கு கிடையாது என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக சச்சின், கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள், இது எங்கள் நாட்டு விவகாரம், நீங்கள் இதில் வேடிக்கை பார்க்கலாம். கருத்து சொல்ல முடியாது என்று பாஜக அரசுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

வலதுசாரி ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், தனது பதிவில், “அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள். அவர்கள் அமெரிக்காவைப் போல இந்தியாவைப் பிரித்து, சீனாவின் ஆதிக்கத்தை ஓங்கச்செய்ய முயல்கின்றனர். நாங்கள் உங்களைப் போல் எங்கள் நாட்டை விற்பனை செய்வதில்லை. இதுகுறித்து நீங்கள் பேசவேண்டாம். அமைதியாக இருங்கள் முட்டாள்களே” எனக் கடுமையாகப் பேசி உள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913?s=20

இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியா தெரியும், இந்தியாவுக்கு முடிவு செய்ய வேண்டும். ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “ஒரு நாடாக நமக்கு இன்றைக்கு தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. நாளையும் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கும்; அதற்கு நாம் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறோம் அல்லது வெளிப்புற சக்திகளால் குழப்பமடைகிறோம் என்று அர்த்தமாகாது; எல்லாவற்றையும் இணக்கமான மற்றும் பாரபட்சமற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

70 நாட்களுக்கும் மேலாக இந்தியாவின் தலைநகரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை குரல் கொடுக்காத சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள், தற்போது பாஜக மோடி அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டவர்களை எதிர்த்து குரல் எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலர் பாஜக மோடி அரசிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் கருத்தை விமர்சிக்கும் வகையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதான் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு போலீசார் மூலம் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்போது அந்த கொலைக்காக நாம் முறையாக வருத்தம் தெரிவித்தோம்” என குறிப்பிட்டு, அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட போது இந்திய பிரபலங்கள் கருத்து தெரிவித்தை சுட்டிக்காட்டி பதான் கிண்டல் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஹீரோக்களை கவனமாக, அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்துகொள்ளும் தன்மையும்தான் தேவை. எந்த நிலைப்பாட்டையும் எதிலும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரச்சாரம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1357313378830622722?s=20

அதேபோல் பாஜகவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ள பிரபலங்களுக்கு பதிலடியாக ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி, “ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்: கிரேட்டா தன்பெர்க்