மக்களவை தேர்தலில் 50% வாக்கு இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிடக்கோரி அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
21 அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தி.மு.க, காங்கிரஸ், தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மனுதாக்கல் செய்தன.
 
அதில், பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
 
இந்த நடைமுறையால் மொத்தம் பதிவான வாக்குகளில் 0.44% வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடும். இதனால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்றும், எனவே, 50% வாக்குப்பதிவு மையங்களிலாவது ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கட்சிகளின் பரிந்துரையானது, தற்போதுள்ள நடைமுறை மீது எந்த அவதூறையோ, சந்தேகத்தையோ எழுப்புவது இல்லை என்றும் திருப்திக்கானது என கூறினார்.
 
எனவே, ஒப்புகைச்சீட்டு (விவிபேட்) இயந்திரத்தை சரிபார்க்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும். இது குறித்து ஆணையத்தின் பதிலை வரும் 28ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதில் தற்போது பயன்படுத்தப்படும் நடைமுறையே ஏற்றதாக இருக்கிறது.
 
எனவே, அதையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் தேர்தலில் ஒப்புகை சீட்டு முறை குறித்து ஏற்கனவே ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
 
தற்போதைய தேர்தலிலேயே திடீரென இதை அதிகரிக்க இயலாது என்றும், வரும் காலத்தில் நடைபெறும் தேர்தலில் இந்த யோசனை கருத்தில் கொள்ளப்படும் எனவும் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.