மருத்துவப் படிப்பிற்கான அரசு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ஏற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக மாணவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும், அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

மேலும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து 58 நாட்களாக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்கு கீழ் வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதாரத்துறைக்கு கீழ் கொண்டு வந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில்,

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், மாணவர்களின் கல்விகட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் படிக்கும் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு உரிய கல்வி கட்டணம் வசூக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து, தமிழக அரசு பிப்ரவரி 04 அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில், ஓராண்டுக்கு மருத்துவப் படிப்புக்கு ரூ.13,610 கட்டணமும், பல் மருத்துவப் படிப்புக்கு ரூ.11,610 கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்பு செலுத்திய கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது என்றும், இனிமேல் பெறும் கட்டணம் அரசு கட்டணமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டண நிர்ணய உத்தரவை வரவேற்று, போராட்டக் களத்தில் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், 58 நாட்களாக நடத்தி வந்த தொடர் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்தால் போதாது; தொடரும் போராட்டம்