மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் பல் மருத்துவராக உள்ள அவரது தந்தை மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். கலந்தாய்வில் அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சான்றிதழ் அளித்திருந்தார்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில் அவரது கலந்தாய்வு அழைப்புக் கடிதம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததில் அவர் போலிச் சான்றிதழ் அளித்தது தெரியவந்தது.

மாணவி தீக்ஷா நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆனால் 610 மதிப்பெண்கள் எடுத்த ஹிர்த்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை எடுத்து, அதில் ஹிர்த்திகாவின் புகைப்படம், சீரியல் நம்பரை எடுத்துவிட்டு தீக்ஷாவின் புகைப்படம் மற்றும் சீரியல் நம்பரை மாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் செல்வராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு போலீசார் மாணவி தீக்ஷா மற்றும் தந்தை பாலச்சந்திரன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவி தீக்ஷாவின் தந்தை பாலச்சந்திரன், பல் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில் இருவர் மீதும் 420- ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என குறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்