குடியுரிமை திருத்தச் சட்டம் இணைந்து வாழும் மக்களைப் பிரித்து வைக்கும் ஒன்றாக உள்ளதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, நாடாளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர்,

இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. முஸ்லிம்கள் இதில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

இது மக்களை மதரீதியாகப் பிரிக்கிறது என்பதால், மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் ஒன்றிய அரசு சட்டத்திருத்த மசோதாவை மாற்ற முன்வரவில்லை. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (செப்டம்பர் 08) தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வமான உரிமை. சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது. அதன்படி பார்க்கும் போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை.

ஆனால் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மத சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உகந்ததாக இல்லை. அகதிகளாக இங்கு வந்தவர்களை மத ரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் அந்த சட்டம் இருக்கிறது.

இந்த சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கை தமிழர்களை பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. இந்த சட்டத் திருத்தும் மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்க வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தனி தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அதன் பிறகு இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வதற்கு முன்பே எதிர்க்கட்சியான அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் பேச கே.பி.முனுசாமி முயற்சித்தார். அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி