புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று (30.12.2021) காலை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது மலைப்பகுதி மைதானத்தில் துப்பாக்கியொன்றில் இருந்து பாய்ந்த தோட்டா, மலையடிவாரத்தில் உள்ள வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் பாய்ந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இருப்பினும் சிறுவன் புகழேந்தி இருபத்தி நான்கு மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராமப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அரசு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன், “துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். அதுபோல் தான் இந்த இடமும் உள்ளது. ஆனால் ஏதோ தவறுதலாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியின் தூரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளது. ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து செயலர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டபோது பெரும் பிரச்னை கிளம்பியது. இந்த பயிற்சி மையம் வேண்டாம் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், பிரச்னை ஏற்படும் சமயங்களில் மட்டும் கோரிக்கை வைப்பதும் பின்னர் மறந்து விடுவதுமாக உள்ளது. இப்போது 11 வயது சிறுவனுக்கு இப்படி நடந்துள்ளது. எனவே துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.