விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறும் என ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் தெரிவித்து வருகிறது. தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத மத்திய மோடி அரசை அதன் கூட்டணி கட்சிகளே கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு எதிர்த்து தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடர்ந்து, ஹரியானாவில், பாஜக கூட்டணி கட்சியான சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியும் (ஜேஜேபி), விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஹரியானாவில் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்

இந்நிலையில் தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவோம் என அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று டெல்லியில் விவசாயிகளை சந்தித்து ஆதரித்து தெரிவித்த ஆர்எல்பி கட்சியின் தலைவரும், எம்பி.யுமான ஹனுமான் பெனிவால், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. எனவே பிரதமர் மோடி விவசாயிகள் மீது உண்மையில் அக்கறை கொள்பவராக இருந்தால், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாது, கூடிய விரையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஆர்எல்பி கட்சி வெளியேறும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதன் கூட்டணிக் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளது, மோடியை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாக பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; இதுவரை 11 விவசாயிகள் உயிரிழப்பு