நீட், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மூலம் தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும், அத்துடன் திரைப்பட திருட்டுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேசமயம் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு படத்தை தடை செய்யவும் இந்த புதிய மசோதாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் காரணமாக இந்த மசோதாவிற்கு நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகர் கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என்று காட்டமாக பதிவிட்டார்.

இந்நிலையில் பாஜக அலுவலகமான சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நடிகர் சூர்யா இந்திய இறையாண்மையை கொச்சைப்படுத்தி வருவதாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்திய எம்எல்ஏ ஈஸ்வரன், மற்றும் அதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்த்து, விமர்சனம் வைக்கும் நிலையில் நடிகர் சூர்யா மீது மட்டும் எதிர்ப்பைக் காட்டுவது ஏன்.. கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? என நடிகர் சூர்யாவுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூக ஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த திரைக் கலைஞர் சூர்யாவிற்கு, பாஜக இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. எனவே அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ள எந்தவொரு உரிமையின் மீதும் யாரும் கைவைக்க அனுமதிக்க முடியாது,

பாஜகவின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை கண்டிக்கவும், மேற்கூறிய சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிற்கு எதிராக நடிகர் சூர்யா போர்க்கொடி!