இந்திய ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்.. இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு.. என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக தீவிரமாக மாறியுள்ளது. மே 5ம் தேதி லடாக்கிலும், சிக்கிமில் சீனா அத்துமீறியது. அப்போது தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசியும், ஆணிகளைக் கொண்ட கம்பால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க: இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம்… நடந்தது என்ன..?

இந்நிலையில் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி நாளை அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்தியா – சீனா இடையிலான லடாக் மோதல் தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் இன்று முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய வீரர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி சீனா மிகப் பெரிய குற்றத்தை செய்துள்ளது. மேலும் ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு?

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை கடுமையாக தாக்கியதால் வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் இந்திய ராணுவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏன் அவமானப்படுத்துகிறார்?

இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனாவுக்கு எப்படி தைரியம் வந்தது? இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த இரு நாட்கள் கழித்து ஆறுதல் கூறுவது ஏன் என்று ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்னதாக, எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் ஒளிந்துக் கொள்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரிய வேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.