பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவரும், சமூக ஆர்வலருமான ஸ்டான் சுவாமி சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததற்கு பல்வேறு கட்சியினரும் பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் மூலம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு பீமா- கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஸ்டேன் சுவாமி மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டு, மகாராஷ்டிராவில் உள்ள தலேஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டேன் சுவாமி . இவர் என்ஐஏ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து மே இறுதி வரை சிறை மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டேன் சாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். உபா சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் தான் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து மகாராஷ்டிரா அரசின் தலைமைச் செயலாளருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேலும் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவினர் மேரி லார் இதுகுறித்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்டான் சுவாமியின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியானதை கேட்டு மேரி லாலர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (5-7-2021) ஸ்டேன் சுவாமி சிறையிலேயே உடல்நலக்குறைவினால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கின்சன் நோய் இருந்ததால் தண்ணீர் கூட அருந்த முடியாமல் ஸ்டான் சுவாமி இருந்தார் எனவும்,

சிறையில் இருந்த அவருக்கு உடல் நிலை கருதி ஜாமினும் வழங்காமல், உரிய சிகிச்சையும் அளிக்காமல் இருந்ததால் தான் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார் என கூறப்படுகிறது. ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்து, அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்ததற்காக பாஜக அரசிற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி