நாடு முழுவதும் “சக்கா ஜாம் (Chakka Jam)” என்ற பெயரில் நாளை (பிப்ரவரி 06) மூன்று மணி நேரம் நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 70வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
கடும் குளிரிலும், பனியிலும் உறுதியுடன் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாஜக மோடி அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக மத்திய அரசுடனான 11 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில்,
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி பாஜக மோடி அரசின் சூழ்ச்சியால் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒன்று திரள தொடங்கினர்.
இதனை தடுக்கும் முயற்சியாக இணைய சேவை துண்டித்தும், டெல்லி எல்லைகளில் இரும்பு வேலி, தடுப்பு சுவர், ஆணிகள் பதிப்பு, கான்கிரிட் தடுப்புகள் அமைத்து விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை பாஜக மோடி அரசின் காவல்துறையினர் செய்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்டப் போராட்டமாக பிப்ரவரி 06 ஆம் தேதி “சக்கா ஜாம் (Chakka Jam)” எனும் நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவா்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “டெல்லியில் போரட்டக் களங்களுக்கு அருகே உள்ள பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு எதிரான அதிகாரிகளின் அத்துமீறல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிப்ரவரி 06 ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகளின் மறியல் போராட்டம் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
மேலும், இந்த போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை, பள்ளி வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், “உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது சிலர் வன்முறையை ஏற்படுத்துவதற்கான சதி வேலைகளை செய்ய இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இதனால் அந்த இடங்களில் நாளை போராட்டம் நடைபெறாது”’ எனத் தெரிவித்துள்ளார்.