முஸ்லீம்களை மத வெறியர்கள் என சித்தரித்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி காவல் ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மத வெறி தாக்குதல் காரணமாக நடந்தது என பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சமூக வலைதளத்தில் மத ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான கருத்து மோதல்கள் எழுந்தன.

இதுகுறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட பதிவில், “ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ், சின்னக் கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியிருந்தார். இந்த கருத்து தவறானது, கொலை முன் விரோதம் காரணமாகவே நடந்தது என மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறியபோதும் பாஜகவினர் தொடர்ந்து மதக் கலவரங்களை தூண்டும் சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து ராமநாதபுரம் காவல்துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “ராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31ஆம் தேதி நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடந்த சம்பவம்.

இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்” என்று கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முஸ்லீம்களை மத வெறியர்கள் என சித்தரித்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி காவல் ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீரென தமிழக அரசு வெளியிட்டுள்ள பணியிட மாற்ற உத்தரவில், “ராமநாதபுரம் எஸ்பி வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகிறார். வருண் குமாருக்குப் பதிலாக கார்த்திக் பணியமர்த்தப்படுகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் தனிப்பட்ட விரோதத்தில் நடைபெற்ற படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்து, பாஜக உருவாக்க முயன்ற மதக் கலவரத்தை தடுத்த போலீஸ் எஸ்பியை எடப்பாடி அரசு மாற்றம் செய்யப்பட்டதற்கு ராமநாதபுர மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் மத ரீதியான மோதல்களை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், தமிழக மக்களை தீவிரவாதிகள் என கூறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம்