ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் லால் பீல் மீது, தன்னை திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் உதய்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பிரதாப் லால் பீல் (வயது 56). பாஜகவை சேர்ந்த இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டில் எம்.எல்.ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பின் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் அளித்துள்ள புகாரில், எம்எல்ஏ பிரதாப், மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்தார். அப்போது எம்எல்ஏவுக்கு தனக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக எம்எல்ஏ தெரிவிக்க தான் அதை மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து வற்புறுத்தவே, அவரது குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என எம்எல்ஏவிடம் தெரிவித்ததாக அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையிலான கசப்பான சம்பவங்கள் குறித்து எம்எல்ஏ கூறி, தான் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல நானும் எனது திருமண உறவில் விரிசல் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

இதனிடையே ஊரார் முன்னிலையில் தனது மனைவி முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக கூறி எம்எல்ஏ பிரதாப் லால் பீல், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அதன் பின்னர் தன்னை திருமணம் செய்துக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டார் எனவும் புகாரில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரை பெற்றுக்கொண்ட உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் பஞ்சார், எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதி மீதான புகார் என்பதால் வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது