ஆணிகளை பதித்தும், தடுப்புகள் சுவர்கள் கட்டியும் விவசாயிகள் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்துவரும் நிலையில், சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 68 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை முதல், காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் அடைத்து, தடுப்புகளை வைத்துள்ளது காவல்துறை. இதுதவிர, இந்த மூன்று இடங்களிலிருந்தும் டெல்லி செல்லும் பாதையிலும் ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும் அணி திரண்டு வருவதால், அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மேலும் ஒன்று சேர்வதை தடுக்கும் பொருட்டு, அப்பகுதியில்‌, கண்டெர்னர்களை வரிசையாக அடுக்கியுள்ளதுடன்‌, கான்கிரீட்‌ தடுப்புகளையும்‌ அமைத்துள்ளது காவல்துறை.

அதேபோல் திக்ரி எல்லையிலும் காவல்துறையினர் கான்கிரீட் தடுப்புகளை நிறுவியுள்ளனர். மேலும், வாகனங்கள் கடக்க முடியாதபடி கூர்மையான இரும்புக் கம்பிகளும், ஆணிகளும் சாலையில் புதைக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் சிங்கு எல்லையிலும் காவல்துறை தடுப்புகளை நிறுவியுள்ளது. டெல்லியில் இருந்து சிங்கு எல்லையை நோக்கிச் செல்லும் பாதையில், சிங்கு எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு அருகிலுள்ள சாலை முழுவதுமாகத் தோண்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில வாகனங்கள் மட்டுமே தடுப்புக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஊடக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் டிரம்ப் அறிவித்தது போன்ற ஒரு தடுப்பைத் தான் இப்போது டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையில் மோடி அரசு அமைத்து வருகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி- உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்புகள் அமைத்து சாலைகளால் ஆணிகள் பதித்துள்ளது டெல்லி காவல்துறை. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்ந்தி தனது பதிவில், “சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள்” என்று மோடி அரசை சாட்டியுள்ளார்.

டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி; 84 விவசாயிகள் கைது