திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம். விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, 10வது நாளன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும்.
இதனைக் காண திருவண்ணாமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். சென்ற வருடம் இந்த விழாவை காண சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்நிலையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்றும், அதனை தொடர்ந்து வரப்போகும் பவுர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை மற்றும் அண்ணாமலையார் மலை மீது ஏறி மகா தீபத்தினை தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி நடைபெறும் தீபத் திருநாள் தவிர, நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தினந்தோறும் சுமார் 5000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, முறையான அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.