சாய்பாபா பிறந்த இடம் குறித்துத்த சர்ச்சையால் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காலவரையறையின்றி சீரடி சாய்பாபா கோயிலை மூடி வைக்கலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள சீரடியில் சாய்பாபாவுக்குக் கோயில் இருக்கிறது. இங்கு இந்தியா மட்டுமின்றி சாய்பாபாவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

சாய்பாபா அங்குதான் அதிக நாள் வாழ்ந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் அவர் அங்குதான் பிறந்தார் என்றும் நம்பப்படுகிறது. எனினும் அவர் அங்குதான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் தகவல் ஏதும் இல்லை.

சாய்பாபா பிறந்த ஊர் தொடர்பாக நீண்ட காலமாகச் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரியில் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். மேலும் பத்ரியில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில், சாய்பாபா ஞானமடையும் முன்பு வரை இஸ்லாமிய முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிர முதல்வரின் இந்த பேச்சு இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாய்பாபா பிரியர்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறது. சாய்பாபா பிறப்பு தொடர்பான பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்ரியில் சாய்பாபா கோயில் அமைந்துவிட்டால் சீரடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனவே ஷீரடி குறித்துக் கிளம்பி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் கோயில் நிர்வாகம் சாய்பாபா கோயிலை மூடியது.

அதே வேளையில் 2 நாட்களாக சீரடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உத்தவ் தாக்ரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.