கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க மாநில மனிதஉரிமை ஆணையம் முடிவு செய்துள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி நிகழ்வாக அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதற்கான ஆதராங்களையும் வீடியோ காட்சிகளையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன. இந்தத் தனியார் நிறுவனங்களைத் தேர்வுசெய்ய டெண்டர் விதிமுறை பின்பற்றப்படுகிறது. கடந்த 2013-ல் பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி நிறுவனத்துக்கு (Padmavathi Hospitality And Facility Management Services), சுமார் 360 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
 
பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மகன் விவேக் பங்குதாரராக உள்ள பாஸ்கர் கனுமுரியின் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க ராம மோகன ராவ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டருக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீண்டும் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.
 
இந்த நிலையில், பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் கடந்த ஐனவரி மாதம் சி.பி.ஐ-யிடம் புகார் அளித்திருந்தது.
 
புகாருக்கான ஆதாரங்களையும் அப்போது வழங்கியிருந்தது. அதில், அரசின் (1802/TNMSC/ENGG/2016 dt.08.01.2016) என தேதியிட்ட இந்த டெண்டர் பிரிவில் போட்டியிடும் நிறுவனங்களுக்கு அடிப்படைத் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
 
அவற்றில், இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் (Indian Companies act -1956 ) கீழ் டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
மேலும் ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விதிகளையெல்லாம் மீறி பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று புகார் அளித்திருந்தது, தற்போது எவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்தன என்பதை விளக்கும் விரிவான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
 
மேலும், பத்மாவாதி நிறுவன டெண்டர் மூலம் எடுக்கப்பட்ட ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் செய்யும் முறைகேடுகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது .
 
”குறைந்தபட்சம் ஓர் அரசு மருத்துவமனையில், 200 துப்பரவுப் பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், 50 ஊழியர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு… 200 ஊழியர்களாகக் கணக்குக் காட்டுகிறது” எனக் குற்றம்சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்டேஷ்.
 
மேலும் அவர், ”அந்த நிறுவனம் அதிகமான ஊழியர்களைக் கணக்குக் காட்டுவதற்காக இடது கை, வலது கை என மாறிமாறிக் கையெழுத்திடும் தொடர்பான வீடியோவை நாங்கள் வெளியிட்டுள்ளோம்” என்றார்.
 
”பத்மாவதி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவதற்காகத் தேதிகளையும் அதன் விதிமுறைகளையும் மாற்றியுள்ளனர் .டெண்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 28.1.2016 என்று முடிவு செய்யப்பட்டதை 5.2.2016 என்று நீட்டித்துள்ளது.
 
பின்னர், ராம மோகன ராவும் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த செல்வி அபுர்வாவும் இணைந்து டெண்டரின் கடைசி நாளுக்கு முன்னதாக, அதாவது 4.2.2016 அன்று,டெண்டரின் கடைசித் தேதியை 16.02.2016 என மாற்றியுள்ளதாக தெரிகிறது . அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளோம்.
 
மேலும், டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களின் தகுதிகளையும் மாற்றி,பிரப்ரைட்டிரி ஷிப் மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்களும் பங்குபெறும் வகையில் மாற்றியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆதராங்களையும் வீடியோ காட்சிகளையும் தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்கத்துக்குக் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வழங்கினோம்.
 
ஆனால், அது தொடர்பாக அந்தத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அப்பட்டமாக ஊழல் நடந்துள்ளதற்கான ஆதராங்கள் ‘மற்றும் வீடியோக்களைக் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் உள்ள அந்தத் துறை தமிழகத்தில் எதற்கு”? இதுதொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலாளரைச் சந்தித்துப் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும், தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்” என்றார். 
 
ராமமோகனராவ் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தலைமை செயளாலர் ஆக நியமிக்கப்பட்டு .,ஜெயலலிதா இறந்தவுடன் பல் வேறு ஊழல் வழக்கில் சிக்கி ரைய்டில் மாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டு., பின்னர் எடப்பாடி அரசால் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது