கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தடை போடுவதை கைவிட்டு, தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட வேண்டும் என விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு, ‘தமிழுக்குத் தனியொரு விதி’ உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுவும் கூட, அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள், வாரத்தில் இரண்டு மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்தி விட வேண்டும் என்றெல்லாம் கடும் நிபந்தனைகளை விதித்து அன்னைத் தமிழின் மீது அகிலம் போற்றும் செம்மொழி மீது, வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழ் பயிற்றுவிப்பது கூட ஆறாம் வகுப்பிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று, தாய்மொழியைக் கற்பதற்கு எதிரான ஒரு நிரந்தரத் தடையை விதித்து, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழக மாணவர்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்று மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.

சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, தமிழ் மொழியை மட்டும் இவ்வாறு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பலவற்றிற்கு, தமிழ்நாடு அரசு தான் நிலம் கொடுத்துள்ளது. அங்குதான் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கே இந்தப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுவிக்கப்பட மாட்டாது என்பதிலிருந்து, தமிழ் மீது பாசமாக இருப்பது போல் போட்ட பாஜகவின் வேஷம் கலைந்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். குறிப்பாக, புதிய கல்விக்கொள்கையைப் புகழ்ந்து தாய்மொழியில் கற்பது அந்தக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வாக்குறுதி அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்! மீண்டும் ஒரு போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிட வேண்டாம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கிளையான ஏபிவிபி எதிர்ப்பால், அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு வலுக்கும் கண்டனங்கள்