தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அரியர் தேர்வில் மோசடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் என தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சூரப்பா கூறியது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து சூரப்பாவிற்கு எதிரான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. சூரப்பா தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக எதிர்காலத்திற்கும் எதிராக செயல்பட்டாரா என்று விசாரணை செய்து, 3 மாதங்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் சூரப்பா, “தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக வாங்கவில்லை. எனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு பணி நியமனம் அளிக்கவில்லை. எனது மகளுக்கு நான் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை; அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது.

பெயர் குறிப்படாமல் எனக்கு சில மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. மிரட்டல்களுக்கு அடிபணியாததால் எனக்கு எதிராக அவதூறு புகார்களை கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை; நான் நேர்மையானவன். எனது வங்கி கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளலாம்.

விசாரணை குறித்து கவலை இல்லை. எதையும் சந்திக்க தயார். மக்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளட்டும். நான் கடந்து வந்த பாதை மக்களுக்கு தெரியட்டும். இதுதொடர்பாக ஆளுநர் உள்பட யாரையும் தான் சந்திக்க போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கிளையான ஏபிவிபி எதிர்ப்பால், அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு வலுக்கும் கண்டனங்கள்