ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் மூலம், 2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்றிக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து,
மருத்துவர்களின் அறிவுரைப்படி, உடல்நலம் பாதிப்பு காரணமாக, தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி, கட்சித் தொடங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.
ஆனால் நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, ரஜினியின் ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். அப்போதும் “நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை” என்று ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு,
தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், “தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் எங்களை திமுகவில் இணைத்துக் கொண்டோம். அதுமட்டுமல்லாது, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மேலும் பல நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தது பாஜகவினரிடையே மிகப்பெரிய அதிருப்தியையும், கலக்கத்தில் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.